Friday 4 January, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (16) ஆலா

ஆலா என்று ஒரு பறவை.  இதை ஆங்கிலத்தில் டெர்ன் (Tern) என்பார்கள்.  இந்த இனப் பறவையில் உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள் ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும் ஆர்டிக் ஆலாவிலிருந்து நம் நாட்டிலேயே வாழும் இருபத்துமூன்று வித ஆலாக்களோடு, கிட்டத் தட்ட நாற்பத்தைந்து ரக ஆலாக்கள் அடக்கம். 


ஆர்டிக் ஆலா ஜோடி
(http://www.thewe.cc/thewei/&_/arctic/arctic_terns.jpe)
ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும்.  நீண்டு, அகலக் குறைவான, வளைந்த இறக்கைகளைக் கொண்டது ஆலா. அதன் வால் சிரகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும்.  இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும்.  இப்பறவையின் கால்கள் குட்டையானவை.  தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும்.  திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும்.  அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும்.  ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமாஇல்லை என்றால் மீனின் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மீன் உள்ளே போகாது.

வேடர்கள் துப்பாக்கியால் சுட்டால் துப்பக்கித் தோட்டாக்களினால் அடி படுகிறதோ இல்லையோ ஐந்தாறு ஆலாக்கள் அடிபட்டு செத்து விட்டது என எண்ணும்படி சிறிது தூரம் கீழே விழுவது போல போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பறந்து போய்விடும்.  இவ்வாறு செய்வது பயத்தினாலா அல்லது செத்து விழும் என நம்பி ஆலாக்களைப் பொறுக்குவதற்காக துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு விறையும் வேடனை ஏமாற்றவா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை நம் ஊர்களில் ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம்.  இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.

ஆற்று ஆலா (River Tern)
River_tern.jpg (480 × 320 pixels, file size: 24 KB, MIME type: image/jpeg)

உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா
 Smallarctern.jpg (434 × 242 pixels, file size: 190 KB, MIME type: image/jpeg)

ஆலாக்களின் இறக்கைகள் நீளமாகவும் பின்புறமாக வளைந்தும் இருப்பதால் அவை தரையில் உட்கார்ந்திருக்கும் போது வலது இறக்கையின் நுனி உடலின் இடது பக்கமும், இடது பக்க இறக்கையின் நுனி உடலின் வலது பக்கமும் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

இயற்கையின் எழிலை ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.


                                            நடராஜன் கல்பட்டு

                                            





Wednesday 2 January, 2013


 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (15) கசாப்புக் காரன்

பறவைகளில் தையல் காரரைப் பார்த்தோம்.  நெசவாளரைப் பார்தோம்.  தச்சுவேலை செய்பவரைப் பார்த்தோம். கட்டிடத் தொழிலாளரைக் கூட பார்த்தோம்.  ஒரு கசாப்புக் கடைக் காரரையும் பார்க்க வேண்டாமா?

அசுரக் கிளி அல்லது கசாப்புக் காரன் என்று ஒரு குருவி.  இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும்.

இந்தப் பறவைக்கு ஏன் இந்த வினோதப் பெயர் தெரியுமா?  இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான், சிறு பறவைகள் போன்றவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும்.  பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும்.  வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.  அசுரக்கிளி தான் போங்க!

நம் கசாப்புக் காரர் வியாபாரத்துக்குக் கடை திறக்கவில்லை.  சொந்த உபயோகத்திற்காகத் தான் கடை திறந்திருக்கிறார் என்பது மற்றப் பறவைகளுக்குத் தெரியாது போலும் !

இந்தியாவில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் குருவிகள் உள்ளன.  அவற்றில் தமிழ் நாட்டில் பே பேக்ட் ஷ்ரைக் என்பதையும், க்ரே ஷ்ரைக் என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புரங்களிலும், தரிசுக் காடுகளிலும் காணலாம்.  முட்கள் உள்ள மரம் அருகில் கட்டாயம் இருக்கவேண்டும்.  அடுத்த பக்கத்தில் பாருங்கள் சாம்பல் நிற கசாப்புக்க காரர் எப்படிக் கடை திறந்து வைத்திருக்கிறார் என்று.
                                                  
கசாப்புக் காரர் கடையில் ஒரு சுண்டெலி
(http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Lanius_excubitor_1_%28Marek_Szczepanek%29.jpg)

இவர் கடையில் ஒரு கோழிக் குஞ்சு
                                                                                                                     
செம்முதுகு கசாப்புக் காரன் (Bay backed Shrike (http://en.wikipedia.org/wiki/Image:Bay-backed_Shrike_(Lanius_vittatus) _at_Sultanpur_I_Picture_052.jpg)                                                  
                                                                            
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை !


                                      நடராஜன் கல்பட்டு