Sunday 30 June, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (31) சில வினோதப் பறவைகள் (1) மீன் பிடிக்க மறந்த மீன் கொத்தி : கூக்கபரா

பாடும் பறவைகள் சிலவற்றைப் பார்த்தோம். சிரிக்கும் பறவையைப் பார்க்க வேண்டாமா.

ஆஸ்திரேலியாவில் கூக்கபரா (Kookaburra) என்றொரு பறவை.  இது மீன் கொத்திகளின் இனத்தைச் சேர்ந்தது.  உடல் அளவில் மீன் கொத்திகளை விட சற்றே பெரியது.  வெள்ளை நிற உடலில் வெள்ளை புள்ளிகள் கொண்ட பழுப்பு நிற இறக்கைகள்  அல்லது நீலமும் கருப்பும் கலந்த் இறக்கையும் வாலும் கொண்டது. உச்சந்தலையிலும், வாயின் ஆரம்பத்தில் இருந்து கழுத்தின் பாதி தூரம் வரையிலும் கரும் பழுப்பு நிறப் பட்டைகள். வால் சிறகுகளில் குருக்கு வாட்டில் கரும் பழுப்பும் ஆரஞ்சுமாக மாறி மாறிப் பட்டைகள்.  மேல் அலகு கருநீலத்திலும் கீழ் அலகு மஞ்சள் கலந்த ரோஜா நிறத்திலும் இருக்கும்.


 

  


பார்ப்பதற்கு நம் நாட்டு மீன் கொத்தி போலவே இருக்கும் இந்தப் பறவைக்கு மீன் பிடிக்கத் தெரியாது.  ஆனால் எலிகள், பாம்பு, ஓணான் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும்.  ஆகவே விவசாயிகள் இந்தப் பறவையை தங்களுக்கு உபயோகமான ஒன்று என்ற எண்ணத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் டாஸ்மேனியாவிலும் கூட குடியேற்றி இருக்கிறார்கள்.

கூக்கபராவிற்குத் தெரிந்த ஒன்று கூட்டமாகக் கூடி வெடிச் சிரிப்பு
அலைகளை எழுப்புபது.  அவை சிரிக்கும்போது காடே அதிரும் என்று கூடச் சொல்லலாம்.



http://www.mareebaheritagecentre.com.au/images/kookaburra-large.jpg

தொடர் சிரிப்பினைக் கேட்க சுட்டியை அழுத்துங்கள் (Ctrl+click on link below) அல்லது சுட்டியினை காபி செய்து வலைத் தேடியில் பேஸ்ட் செய்து enter பட்டனை அழுத்தவும்.

(சிரிப்பின் நடுவே ஏப்பம் வேறா?)

இயற்கையின் எழில் வழியே இறைவன் நமக்களிக்கும் கண்கொளாக் காட்சிகளைக் கண்டு / கேட்டு ரசியுங்கள்.

                                            நடராஜன் கல்பட்டு


Saturday 29 June, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் இசை பாடும் பறவைகள் (3) மாம்பழத்தான்

மாம்பழத்தான் என்று ஒரு பறவை.  மாந்தோப்புகளில் அதிகம் காணப்படுவதால் இந்தப் பெயரா அல்லது மாம்பழத்தின் நிறத்தினை இதன் நிறம் சற்று ஒத்திருப்பதால் இந்தப் பெயரா என்பது தெரியாது.  சில கிராம வாசிகள் இதனை கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கின்றனர்.  ஆங்கிலத்தில் இதன் பெயர் ட்ரீ பை (Tree pie).

இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda).  இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.



சாதாரணமாக மாம்பழத்தானை வேறு பல பறவைகளைப் போல தரையில் கணமுடியாது.  இவை எப்போதுமே அடர்ந்த இலைகள் இடையே சஞ்சரிக்கும்.

மாம்பழத்தானின் உணவு பழங்கள், மரங்களில் காணப்படும் புழு பூச்சிகள்.  இவை போதாதென்று அவ்வப்போது மற்ற பல பறவைகளின் கூடுகளிலிருந்து முட்டை, குஞ்சு இவற்றையும் திருடித் தின்னும்.  காடுகளில் புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் கொன்று போட்டிருக்கும் ஆடு, மான் இவற்றின் சடலங்களை முதலில் சென்றடையும் பறவை மாம்பழத்தான் தான் என்பர் சில பறவை வல்லுனர்கள்..

குணம் எப்படியோ. மாம்பழத்தானின் குரல் மிக விசேஷமானது.  இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது.  அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும்.

இனிமையான குரலில் எழுப்பும் ஒலி, கோகிலா... கோகிலா... என்ற தமிழ் வார்த்தையினையோ அல்லது பாப் ஓ லிங்க்... பாப் ஓ லிங்க்... என்ற ஆங்கில வார்த்தையினையோ புல்லாங்குழலில் வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.  அதன் இனிமை அதைக் கேட்டு ரசித்தவர்களுக்குத்தான் தெரியும்.

நாராசமான ஒலி எழுப்பும்போதோ இரண்டு மூன்று பறவைகள் சண்டை போடுகின்றனவோ என்ற சந்தேகம் நமக்கு எழும்.

மாம்பழத்தான் பறப்பதைப் பார்க்க சற்று வினோதமாக இருக்கும்.  இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும்.  திடீரென சற்று தூரம் கீழ் நோக்கிச் சென்று பின் இறக்கைகளை அடித்துக்க் கொண்டு பழய நேர்கோட்டுப் பாதையை அடைந்து முன் போலவே பறக்கும்.  இது ஒரு அழகிய காட்சி.

நம் நாட்டில் கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திலும், தமிழ் நாட்டில் டாப் ஸ்லிப் மற்றும் சிங்கம்பட்டி என்னும் இடங்களிலும் வெள்ளை மார்பு கொண்ட ஒரு மாம்பழத்தான் உண்டு.  இப்பறவையின் பெயர் தெற்கத்திய ட்ரீ பை (Southern Tree pie.  விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் Dendrocitta leukogastra).  இதன் மார்பு மற்றும் தலையும் கழுத்தின் பின்புறமும் வெள்ளையாக இருக்கும் கீழே உள்ள படத்தில் உள்ளபடி.  

தமிழ் நாட்டில் இதன் பெயர் நீளவால் குருவி. 




மாம்பழத்தான் உருவத்தில் குயில் போன்று இருந்தாலும் இது குயில் போல் அல்லாமல் தானே கூடு கட்டி, முட்டை இட்டு, அடை காத்து, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்க்கும்.

இயற்கையின் எழில் மூலம் நமக்கு இறைவன் தரும் இன்பங்கள்   அவனைக் கட்டாயம் நம் முன் நிறுத்தும்.


                                            நடராஜன் கல்பட்டு 

Saturday 1 June, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (30) இசை பாடும் பறவைகள் (2) மலை மைனா

மதுரமான இசை பாடும் பறவைகளில் ஒன்று மலை மைனா. சதாரணமாக நாம் பார்க்கும் மைனாவைப் போன்றே இருக்கும் இப்பறவையின் வால் சற்று குட்டையானது.


Photograph by Yethin S.K.

ஆங்கிலத்தில் இப்பறவையை கிரேகிள் (Grackle) என்றழைப்பார்கள்.  விஞ்ஞான ரீதியாக இப்பறவைக்கு அளிக்கப் பட்ட பெயர் கிரேகுலா ரிலிஜியோஸா (Gracula riligiosa) என்பதாகும்.

மலை மைனாவை மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை அடிவாரம், மத்யப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில், சுமார் 2500 முதல் 5000 அடி வரையிலான இடங்களில் உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளில் காணலாம்.  த்மிழ் நாட்டில் பழனி மற்றும் கேரளாவின் முதுமலையிலும் காணலாம்

காட்டின் நிசப்த்தத்தைக் கிழித்துக்கொண்டு கணீரென ஒரு பறவையின் குரல் கேட்டால் அது மலை மைனாவின் குரல்தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.  பழனி மலைக்கும், தேக்கடிக்கும் சென்றவர்கள் மலை மைனாவைப் பார்க்காமலோ அதன் தேமதுரக் குரலைக் கேட்காமலோ இருந்திருக்க முடியாது.

மலை மைனாக்கள் விரும்பி உண்பது ஆல், அத்தி போன்ற மரங்களின் பழங்கள், தேன் மற்றும் புழு, பூச்சிகள்.

மலை மைனாக்கள் இனப் பெருக்க காலத்தில் ஜோடிகளாக வாழ்ந்தாலும் மற்ற நாட்களில் சுமார் இருபது பறவைகள் வரை கொண்ட கூட்டமாக வாழும்.


மூன்று நான்கு கிலோமீடரிலான துரம் வரை உள்ள மலை மைனாக்கள் தங்களுக்குள் மூன்று முதல் பதிமூன்று வகையான இசை வடிவங்களில் பேசிக்கொள்ளுமாம்.  அங்கிருந்து சற்றே தூரம் சென்றால் அங்குள்ள காட்டு மைனாக்கள் அதே பாஷையில் பேசிக்கொள்ளுமா என்பது நிச்சயமில்லையாம்.  மலை மைனா இந்த விஷயத்தில் நம்மைப் போலவே இருக்கிறது இல்லையா?  மாவட்டத்திற்கு மாவட்டம் ஒரே மொழி பேசினாலும் பேசும் விதத்தில் வித்தியாசம், மாகாணத்திற்கு மாகாணம் ஒரு மொழி, உலகத்தில் உள்ள பல தேசங்களிலும் பல மொழிகள் என உள்ளது போலவே இந்தப் பறவைகள் பாடும் இசையிலும் இடத்திற்கு இடம் வித்தியாசம்!    

பல குரலில் பாடவல்ல மலை மைனா, காட்டில் வாழும்போது மற்ற பறவைகளின் குரலில் பேசுவதில்லை.  ஆனால் அதே மலை மைனாவைப் பிடித்து வீட்டில் வளர்க்கும் போதோ அவை கேட்கும் குரல்களில் எல்லாம் பேச வல்லது.

மனிதக் குரலை உலகிலேயே மிக நெருக்கமாகத் திருப்பித் தரவல்ல பறவை என்ற பட்டத்தினையும், கூண்டிலடைத்து வைத்தாலும் சற்றும் மனம் தளராத பறவை என்ற பெயரையும் கொண்ட மலை மைனாவிற்கு இதன் இவ்விரு திறமைகளே எதிரி.

மலை மைனாக் குஞ்சுகளை மேற்சொன்ன திறமைகளுக்காக அதிக அளவில் பிடித்து வியாபாரம் செய்வதால் இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. 

நம் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பலர் மூங்கிலைப் பிளந்து செயற்கையாக கூடு  போலத் தயாரித்து மலை மைனாக்களை அவற்றில் முட்டை இட்டுக்குக் குஞ்சு பொரிக்கச் செய்து அக் குஞ்சுகளைப் பிடித்து விற்று விடுகின்றனர்.  என்ன கொடுமை!  சிறகு கொண்ட பறவையினைப் பறக்க விடாமல் சிறையில் அடைத்துதான் அதன் இசை கேட்க வேண்டுமா?

சுதந்திரமாகப் பறந்து திரிந்து தேன் என இசை எழுப்பும் இப் பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அதனால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்காமல், அவை பரப்பும் இசை வெள்ளத்தினைப் பருகுவோமானால் அவற்றைப் படைத்த இறைவனை நாம் நிச்சய்ம் காண்போம்.


                                            நடராஜன் கல்பட்டு  
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (31) சில வினோதப் பறவைகள் (1) பவர் பேர்ட் (Bower bird)

பறவைகள் ஒவ்வொன்றுமே கூர்ந்து கவனித்தால் வினோதம் ஆனவைதான்.  பின் ஏன் சில வினோதப் பறவைகள் என்று எழுத வேண்டும்?  காரணம் இருக்கிறது.  அவை நமது கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வினோதமாக நடந்து கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்.

ஆஸ்திரேலியாவிலும் ந்யூகினியிலும் காணப்படும் ஒரு பறவை பவர் பேர்ட் என்ற பறவை.

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ஒன்று நந்தவனங்களில் செடிகளாலோ, கொடிகளாலோ அமைக்கப் பட்டிருக்கும் அலங்கார வளைவு என்பதாகும்.


அலங்கார வளைவு (Bower)

பவர் பேர்ட் களில் சுமார் பதினெட்டு வகைகள் உள்ளனவாம். இந்தப் பறவைகளின் விசேஷம் என்ன வென்றால் அவற்றின் ஆண் பறவைகள் தன் துணையை ஈர்க்கத் தயாரிககும் அலங்கார வளைவும் அதன் தரைக்கு அழகு சேர்க்க அது சேர்க்கும் பொருட்களும்.

வருடத்தில் பெரும் பகுதி தனித்தே வாழும் ஆண் பறவைகள் இனப் பெருக்க காலம் வந்த உடன் காட்டில் தகுந்த ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு நாணல் போன்ற குச்சிகளை சேகரித்து அலங்கார வளைவினைக் கட்டுகிறது. பின் நீலம் அல்லது பச்சை நிறப் பழச் சாற்றினை தன் எச்சிலோடு கலந்து மரப் பட்டைத் துண்டு ஒன்றினால் கட்டிய வளைவிற்கு சாயம் பூசுகிறது.

காதலியின் கவனம் ஈர்க்க வளைவு கட்டி விட்டால் மட்டும் போதுமா?  அங்கு அழகிய பொருட்கள் வேண்டாம்?  வண்ண வண்ண மலர்கள், சிப்பிகள், மனிதர்கள் குப்பையில் தூக்கி எறியும் வண்ண மிகு கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் மூடிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளைவிற்குள்ளும் அதனைச் சுற்றிலுமும் பரப்பி வைக்கிறது.


அலங்கார வளைவின் கட்டுமானப் பொருள் சேகரம்


வளைவும் மேடையும்   
கண்கவர் குப்பையை யார் சேர்க்கிறாரோ  அவரே என் கணவர் !!!
மேடையும் அலங்கார வளைவும் தயாரானபின் ஆண்பறவை தன் குரல் எழுப்பிப் பெண் பறவையை அழைக்கிறது.  பெண் வந்து அவற்றைப் பார்க்கும் போது ஆசையும் வெட்கமும் உடலில் கூட ஆண் பறவை பலவிதமான உடல் அசைவுகளைக் காட்டி (சாஷ்டாங்க நமஸ்காரம் உட்பட) பெண்ணைக் கவர முயற்சி செய்கிறது.  மனங்கள் இசைந்தால் மணம்.  பின் பெண் பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறது.

பவர் பேர்ட்களில் சேடின் பவர் பேர்ட் என்னும் பறவை நம் நாடில் உள்ள குயில் போன்ற வண்ணமும் தோற்றமும் கொண்டது. 





ஆண் பறவை மின்னும் பச்சை கலந்த கரு நீல வண்ணம் கொண்டது.  குயிலின் கண்கள் சிவப்பாக இருக்கும்.  ஆனால் பவர் பேர்டின் கரு விழியினைச் சுற்றி ஒரு நீலக் கோடு, கரு விழியிலே கரிய பாப்பாவைச் சுற்றி பச்சை கலந்த பழுப்பு நிறம் காணலாம்.  பெண் பறவை பெண் குயில போன்றே புள்ளிகள் கொண்ட பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.  பெண்ணின் விழிகள் நீல நிறத்தில் இருக்கும்.





அழகுப் பொருட்களைச் சேர்ப்பதில் ஒவ்வொரு வகை பவர் பேர்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சேடின் பவர் பேர்ட் நீல நிறப்பொருட்களை சேர்க்கிறது. 

ரீஜென்ட் பவர் பேர்ட் என்னும் பறவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கிரேட் பவர் பேர்ட் வெள்ளை நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கோல்டன் பவர் பேர்ட் வெள்ளை அல்லது மஞ்சள் நிற மலர்களால் தனது அலங்கார வளைவினை அழகுறச் செய்கிறது.


Golden Bowerbird male (top) and female

பவர் பேர்ட் ஒரு வினோதப் பறவைதானே?

இறைவன் எப்படியெல்லாம் நமக்குக் காட்சியளிக்கிறார்!


நடராஜன் கல்பட்டு