Saturday 5 October, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (31)சில வினோதப் பறவைகள் -2- பல் குரல் விற்பன்னர் லயர் பேர்ட்

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு வினோதப் பறவை லயர் பேர்ட் எனப்படும் பறவை.  லயர் என்றவுடன் ‘Liar’ பொய் சொல்பவர் என்று எண்ணி விடாதீர்கள். ‘Lyre’ என்பது ஒரு இசைக் கருவி.




இந்தப் பறவையின் தோகை போன்ற வால் சிறகுகள் லயர் என்ற இசைக் கருவியினைப் போல் இருப்பதால் இப் பறவைக்கு லயர் பேர்ட் என்ற பெயர் வந்தது.

இதன் தோகை பதினாறு இறகுகள் கொண்டது.  நடு இரண்டு இறகுகள் கம்பி போன்று நீண்டவை.  வெளி இரண்டு இறகுகளும் சிறிது அகலமானவை.  அவற்றின் நிறம் மிக அழகாக இருக்கும்.                                                 மற்ற பன்னிரண்டு இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போன்று இருக்கும்.

லயர் பறவைகளில் இரு வகைகள் உண்டு.  ஒன்று மிக அழகான லயர் பறவை” (Superb Lyre bird).  மற்றொன்று ஆல்பர்ட் லயர் பறவை” (Albert Lyre bird) என்பது.  முன்னதின் ஆண் பறவை சுமார் 80 முதல் 98 சென்டிமீடர் வரை நீளமும் பெண் பறவை 74 முதல் 84 சென்டிமீடர் வரை நீளமும் இருக்கும்.  ஆல்பர்ட் (விக்டோரியா அரசியின் கணவர்) லயர் பறவை முன்னதை விட சற்றே சிறியது.





இனப் பெருக்க காலத்தில் ஆண் பறவை அடர்ந்த செடிகள் நடுவே மண்ணாலும் இலை சருகுகளாலும் ஒரு மேடை அமைத்து அதனடுவில் நின்று கொண்டு தன் இசைக் கச்சேரியை ஆரம்பிக்கும்.  கச்சேரி என்றால் என்ன மாதிரிக் கச்சேரி தெரியுமா?

சில நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பறவைகள் விலங்குகள் போலக் கத்தியும், பிரபல நடிகர்கள் போலப் பேசியும் நடித்தும் காண்பிப்பார்களே பல் குரல் விற்பன்னர்கள் அதைப் போன்று பல பறவைகளின் குரல்களையும் ஒலித்துக் காட்டும் இந்தப் பறவை.  அது மட்டும்தான் என்பதில்லை.  மனிதர்கள் எழுப்பும் எந்த ஒலியினையும் இசைத்துக் காட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.  அது மரமறுக்கும் ரம்பத்தின் ஒலியோ, தானியங்கிக் கேமிராவின் ஒலியோ, காரின் அபாய அறிவிப்பு ஒலியோ, சொட்டு சொட்டாக குழாயில் இருந்து வாளியில் விழும் தண்ணீரின் ஒலியையோ இப்படி எந்த ஒலியானாலும் அதனால் இசைத்துக் காட்ட முடியும். இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு பொய் சொல்லும் பறவையும் (Liar bird) தான்.

இப்படிப் பல குரல்களிலும் எழுப்பப் பட்ட இசையினில் மயங்கி ஒரு பெண் பறவை அரங்கை நெருங்கினால் ஆண் பறவை உடனே தன் முதுகின் மீது தோகை சிறகுகளை விரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பட படவென அடித்தபடி இப்படியும் அப்படியுமாகச் சுற்றிச் சுற்றி நடனம் ஆடும்.  நடு நடுவே நமஸ்காரம் செய்வதுபோல உடலைத் தரையைத் தொடச் செய்யும். 

நீங்கள் லயர் பேர்டின் குரல் வளத்தினையும் நடனத்தின் நளினத்தினையும் பார்க்க வேண்டுமா? சொடுக்குங்கள் இங்கே:


அல்லது சுட்டியினைக் காப்பி செய்து கூகிள் ஸர்ச்சில் பேஸ்ட் செய்து enter button னை அழுத்தவும்.

இசையில் மயங்கிய பெண் பறவை, ஆணுடன் உறவாடி பின் அருகிலேயே தரையில் இருந்து அதிக உயரமற்ற இடத்தில் ஒரு கூடு கட்டி அதில் ஒரே ஒரு முட்டை இட்டு ஐம்பது நாட்கள் அடை காத்து குஞ்சு வெளிவந்த பின் அதற்கு இரை கொண்டு வந்து கொடுக்கும்.  ஆணிற்கோ குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய சிரமம் எதுவும் கிடையாது.

இப்போது சொல்லுங்கள் லயர் பேர்ட் பறவை ஒரு வினோதப் பறவைதானே?

இயற்கையில் எழிலில் தான் இறைவன் எத்தனை இன்பக் காட்சிகளை அளிக்கிறான்!

நடராஜன் கல்பட்டு





1 comment:

  1. இது உண்மையாகவே ஒரு அருமையான பறவை தான்.. நீங்கள் இதை பற்றி கூரிய்ஹது இன்னும் நினைவுள்ளது!

    - ராம்.

    ReplyDelete